பெரியார் பஸ்நிலைய பகுதியில் மாநகராட்சி ஊழியர் காரில் கடத்தல்- தனியார் ஆஸ்பத்திரி மேலாளர், ஊழியர் கைது; டாக்டரிடம் விசாரணை
மதுரை பெரியார் பஸ்நிலைய பகுதியில் மாநகராட்சி தற்காலிக ஊழியர் காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி மேலாளர், ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பெரியார் பஸ்நிலைய பகுதியில் மாநகராட்சி தற்காலிக ஊழியர் காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி மேலாளர், ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
மாநகராட்சி ஊழியர்
மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் மாநகராட்சி சுகாதார மையம் உள்ளது. இங்குள்ள மாநகராட்சி வரிவசூல் செய்யும் மையத்தில் தற்காலிக ஊழியராக பி.பி.சாவடி திருமலைகாலனி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை பெரியார் பஸ் நிலைய பகுதியில் அவரை சிலர் காரில் கடத்தி சென்றதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக அவரது மனைவி வினிதா திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காரில் கடத்தல்
இன்ஸ்பெக்டர் காசி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சந்திரன். இவர் அந்த பகுதியில் ஆஸ்பத்திரி ஒன்று கட்டி உள்ளார். அதற்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற்று தர சரண்ராஜை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு கொண்டார். அப்போது சான்றிதழ் பெற அவரிடம் டாக்டர் ஒரு லட்சத்து ரூ.10 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கி கொண்டு சரண்ராஜ் சான்றிதழ் பெற்று தராமல் இழுத்தடித்தாராம். எனவே, தான் கொடுத்த பணத்தை தருமாறு டாக்டர் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணத்தை கொடுக்காமலும், சான்றிதழ் வாங்கி தராமலும் ஏமாற்றினாராம். இதுகுறித்து ஆஸ்பத்திரியில் பணிபுரியும் மேலாளர் கண்ணதாசன், ஊழியர் அருண்பாண்டியனிடம் டாக்டர் சந்திரன் தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு சரண்ராஜை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
2 பேர் கைது
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் காசி மற்றும் தனிப்படை போலீசார், சரண்ராஜை மீட்க உசிலம்பட்டி சென்றனர். அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரை மீட்டனர். அவரிடம் விசாரித்த போது டாக்டர் சந்திரன், மேலாளர் கண்ணதாசன், ஊழியர் அருண்பாண்டியன் ஆகியோர் தன்னை கடத்தி சென்று தாக்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதன்அடிப்படையில் அவர்கள் 3 பேரையும் உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு டாக்டர் கூறியதன் அடிப்படையில் கார் மூலம் கண்ணதாசன், அருண்பாண்டியன் கடத்தி சென்றதாக தெரியவந்தது. தொடர்ந்து திடீர்நகர் போலீசார் அவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கண்ணதாசன், அருண்பாண்டியனை கைது செய்தனர். டாக்டர் சந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.