சேலத்தில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தல்?-மதுரையில் மீட்டு போலீசார் விசாரணை


சேலத்தில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தல்?-மதுரையில் மீட்டு போலீசார் விசாரணை
x

சேலத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தப்பட்டதாக வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவரை போலீசார் மதுரையில் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

காதல் திருமணம்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவர் மேளம் அடிக்கும் தொழிலுக்கு சென்று வந்தார். விக்னேஷ் கொண்டலாம்பட்டியை சேர்ந்த நதியா (20) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். நதியா செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வேலை சென்று வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் தனது கணவருடைய செல்போன் எண்ணுக்கு போன் செய்தார். அப்போது அவர் தன்னை 2 பேர் வேனில் கடத்தி சென்று ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளதாக கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் இதுகுறித்து உடனடியாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

கண்காணிப்பு கேமரா

அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நதியா வேலை பார்த்த கடை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நதியா ஒரு ஆட்டோவில் ஏறி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனால் முதற்கட்ட விசாரணையில் நதியா கடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதற்கிடையில் அவர் மீண்டும் கணவருக்கு போன் செய்து பேசினார். இதையடுத்து அவர் அழைத்த செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது போலீசாரிடம் பேசிய ஒரு பெண், நதியா மதுரை பஸ்சில் சென்று கொண்டிருப்பதாகவும், தன்னிடம் அவர் கணவருக்கு போன் செய்ய வேண்டும் என்று கூறி செல்போன் வாங்கினார் என்றும் கூறினார்.

கடத்தல் நாடகம்

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் செல்போனை யாருக்கும் தெரியாமல் பஸ் கண்டக்டரிடம் கொடுக்கும்படி தெரிவித்தனர். அதன்படி அவரும் போனை கொடுத்தார். கண்டக்டரிடம் பேசிய போலீசார், நாங்கள் தேடும் பெண் ஒருவர் இந்த பஸ்சில் செல்வதாகவும், அவரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் தெரிவித்தனர். இதையடுத்து நதியா மதுரை சமயநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் சேலம் போலீசார் அங்கு விரைந்து சென்று நதியாவை மீட்டு சேலம் அழைத்து வந்தனர். அவர் ஏன்? கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story