ரூ.15 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்; 2 பேர் கைது


ரூ.15 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்; 2 பேர் கைது
x

நெல்லையில் ரூ.15 லட்சம் கேட்டு வாலிபரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் வேல்ராஜ் (வயது 29,. தச்சு தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்த மனைவியை பார்த்து விட்டு நெல்லை சமாதானபுரத்துக்கு வந்தார். அங்கிருந்து தனது தந்தை இசக்கிமுத்துவை தொடர்பு கொண்ட வேல்ராஜ் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுவதாக கூறினார். சிறிது நேரத்திற்கு பின்னர் வேல்ராஜ் மீண்டும் இசக்கிமுத்துவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை 2 பேர் ரூ.15 லட்சம் கேட்டு கடத்தி வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து இதுபற்றி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாளையங்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், இன்ஸ்பெக்டர் சேதுவாசிவம் ஆகியோர் உடனடியாக மாநகர பகுதிகளில் உள்ள போலீசாரை உஷார்படுத்தினர். தொடர்ந்து வேல்ராஜின் செல்போன் எண்ணை டிராக் செய்து பார்த்ததில் அந்த எண் தச்சநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேல்ராஜை மீட்டனர்.

மேலும் அவரை கடத்திய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தச்சநல்லூரை சேர்ந்த ராமசந்திரன் மகன் வெங்கடேஷ் (38), தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியம் மகன் செந்தில்ராஜ் (35) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. வேல்ராஜ் தொழில் ரீதியாக வெங்கடேஷ், செந்தில்ராஜிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் குறைந்த விலைக்கு தங்க நகைகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேஷ், செந்தில்ராஜ் ஆகியோர் சுமார் ரூ.1 லட்சத்தை வேல்ராஜிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் தங்க நகையும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லையாம். இதனால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து வேல்ராஜை கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story