திட்டக்குடி அருகே கொடூரம்: வாலிபரை கொன்று கல்லை கட்டி உடல் கிணற்றில் வீச்சு - யார் அவர்? போலீஸ் விசாரணை
திட்டக்குடி அருகே வாலிபரை கொன்று கல்லைக்கட்டி கிணற்றில் உடலை வீசி சென்றுவிட்டனர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள வெங்கனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் மருதமுத்து (51) என்பவர் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார்.
கடந்த 4 நாட்களாக இவர் நிலத்துக்கு செல்லாமல் இருந்தார். நேற்று மதியம், தனது மாட்டுக்கு சோளத்தட்டை அறுத்து வருவதற்காக மருதமுத்து நிலத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில், தலைக்குப்புற ஒருவர் பிணமாக தண்ணீரில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் இது பற்றி ராமநத்தம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கொடூர கொலை
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ஜம்புலிங்கம், கலியமூர்த்தி மற்றும் போலீசாரும், திட்டக்குடி தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி, கிணற்றில் மிதந்தவரின் உடலை கரைக்கு மீட்டுக்கொண்டு வந்தனர். அதில் பிணமாக கிடந்தவர் 35 வயதுடைய ஆண் என்பதும், அவரது கால்கள் இரண்டும் கயிற்றால் கட்டப்பட்டு, கல் ஒன்றும் கட்டப்பட்டிருந்ததும் தெரிந்தது.
அதேநேரத்தில் அவரது உடல் கைப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வலை மற்றும் அதன் உள்ளே வைக்கோல், டிஜிட்டல் பேனர் கொண்டும் சுற்றப்பட்டு இருந்தது. இதன் மூலம் அவரை யாரோ கொடூரமாக கொலை செய்து, கல்லைக்கட்டி கிணற்றில் வீசி சென்று இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
ஆனால் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவரை அடையாளம் காண்பதில் போலீசுக்கு சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
யார் அவர்?
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், உடல் கிடந்த கிணறு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளதால், வேறு எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றார்களா?, அல்லது அடித்து உயரோடு வலைக்குள் வைத்து கல்லைக்கட்டி கிணற்றுக்குள் வீசி கொடூரமான முறையில் கொலை செய்ப்பட்டாரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.