கில்லா வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
ஆரணியில் கில்லா வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
ஆரணி
ஆரணியில் கில்லா வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
தேரோட்டம்
ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 98-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளும் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி சாமி திருவீதி உலா பல்வேறு வாகனங்களில் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது உற்சவர் தாயார். வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பெரிய மரத்தேரில் ஏற்றப்பட்டது.
தேரை ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வக்கீல் சுந்தர் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. தூசி கே. மோகன், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வக்கீல் கே.சங்கர், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், நகரசபை உறுப்பினர் ரம்யா குமரன், ஆரணி நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஏ.ஜி.ஆனந்த் உள்பட அரசியல் பிரமுகர்கள், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நேர்த்திக்கடன்
தேர் பெரிய கடைவீதி, மண்டி வீதி, காந்தி ரோடு, வடக்கு மாட வீதி வழியாக மாலை 7 மணி அளவில் கோவிலை வந்து அடைத்தது.
வழிநெடுக்கிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி தேர் மீது உப்பு, பொரி உருண்டை, இனிப்பு உள்ளிட்டவர்களை இறைத்தனர். மேலும் ஆங்காங்கே உள்ள வியாபாரிகள் பக்தர்களுக்கு நீர் மோர், குளிர்பானம், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழா குழு தலைவர் வக்கீல் சி.எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் உபயதாரர்கள், நிர்வாக குழு நிர்வாகிகள், இளைஞர்கள், விழா குழுவினர், செயல் அலுவலர் சிவாஜி, ஆய்வாளர் முத்துசாமி ஆகியோர் செய்திருந்தனர்.