கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி


கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x

கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

மின்சாரம் தாக்கியது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவருடைய மனைவி தனசுந்தரி. விவசாயி. சுப்பிரமணி நாள்தோறும் காலை அருகே உள்ள தன்னுடைய தென்னந்தோப்புக்கு சென்று, மரத்தில் இருந்து விழுந்து கிடக்கும் தேங்காய்களை சேகரித்து வருவார்.

வழக்கம்போல் நேற்று காலையும் தேங்காய்களை சேகரித்து வரச்சென்றார். அப்போது தோட்டத்தில் மின்கம்பி அறுந்துகிடந்துள்ளது. அதை தெரியாமல் அவர் மிதித்துவிட்டதால் மின்சாரம் சுப்பிரமணியை தாக்கியது. இதனால் அவர் தூக்கிவீசப்பட்டார்.

விசாரணை

இந்தநிலையில் சுப்பிரமணி தன்னுடைய செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு தோப்புக்கு வந்திருந்தார். உறவினர் ஒருவர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டதால், செல்போனை தருவதற்காக தனசுந்தரி தோப்புக்கு வந்தார். அப்போது மின்கம்பி தரையில் அறுந்துகிடப்பதையும், அதன் அருகே சுப்பிரமணி அசைவற்று கிடப்பதையும் பார்த்து அலறி துடித்தார்.

பின்னர் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்சில் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story