துப்பாக்கி சூட்டில் பலியானதேனி ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் மறியல்
துப்பாக்கி சூட்டில் பலியான, தேனி ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேனி ராணுவ வீரர் சாவு
தேனி மாவட்டம் தேவாரம் மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். விவசாயி. இவரது மனைவி ரத்தினம். இவர்களது மகன் யோகேஷ்குமார் (வயது 24). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, இந்திய ராணுவத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ராணுவ பயிற்சிகளை முடித்துவிட்டு,பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த 12-ந்தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் யோகேஷ் குமார் பலியானார்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேவாரத்திற்கு உடல் ெகாண்டு வரப்பட்டது. அங்கு தேவர் சிலையில் இருந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் யோகேஷ்குமாரின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
சாலை மறியல்
அங்கு ராணுவ வீரரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை மற்றும் அரசு சார்பிலும் மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடல் தகனம்
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவ வீரர் யோகேஷ் குமார் சாவு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் காரணமாக சம்பவம் குறித்து முழுமையாக கூற இயலாது என்றனர்.
இதைத் தொடர்ந்து ராணுவ வீரர் உடலை வீட்டில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்றனர். மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடலுக்கு அவரது தந்தை ஜெயராஜ் தீ மூட்டினார்.