முறப்பநாடு அருகே படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மனைவிக்கு பணி நியமன ஆணை


முறப்பநாடு அருகே படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மனைவிக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 3:14 PM IST)
t-max-icont-min-icon

முறப்பநாடு அருகே படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மனைவிக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி

படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25.4.2023 அன்று தனது அலுவலகத்தில் இருந்த போது, மணல் கடத்தல் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவித் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது.

மனைவிக்கு பணி நியமன ஆணை

இந்தநிலையில் லூர்து பிரான்சிஸ் மனைவி பொன்சிட்டாள் என்பவருக்கு முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி சிறப்பினமாகக் கருதி கருணை அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் பிரிவில் இளநிலை வருவாய் ஆய்வாளராகப் பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் வழங்கினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story