வாலிபரை கொன்று உடல் ஆற்றில் வீச்சு: தந்தை-மகள் உள்பட 8 பேர் கைது
நெருக்கமாக இருக்கும் படங்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால் வாலிபரை வெட்டிக்கொன்று உடலை ஆற்றில் வீசினர். இது தொடர்பாக தந்தை-மகள், மகன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்துள்ள திருமலைசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து பால் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேன் ஓட்டி வந்தார். கடந்த 6-ந் தேதி அன்று வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் வீட்டுக்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் சக்திவேல் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
வாய்க்காலில் ஒதுங்கிய உடல்
இது குறித்து சக்திவேலின் அண்ணன் சரவணன் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அன்று தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள ராராமுத்திரக்கோட்டை மேலத்தோப்பு நெய்வாசல் தென்பாதி வாய்க்காலில் வாலிபரின் உடல் ஒன்று ஒதுங்கியது.
வெட்டிக் கொன்று உடல் ஆற்றில் வீச்சு
அந்த வாலிபருடைய உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. தகவல் அறிந்த போலீசார் வாய்க்காலில் ஒதுங்கிய வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தியபோது அந்த வாலிபரை யாரோ வெட்டிக்கொன்று உடலை ஆற்றில் வீசியது தெரிய வந்தது.
இந்த நிலையில் வல்லம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிய வர காணாமல் போன சக்திவேலின் உறவினர்களை அழைத்துச்சென்று பார்த்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட நபர் சக்திவேல் தான் என்பதை அவருடைய தாயார் வசந்தி போலீசாரிடம் உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இது குறித்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
செல்போன் மூலம் விசாரணை
செல்போன் கோபுரம் மூலம் ஆய்வு செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட சக்திவேல் கடைசியாக தனது செல்போனில் இருந்து யாரிடம் பேசியுள்ளார் என்று விசாரணை நடத்தினர். அப்போது சக்திவேல் கடைசியாக அய்யாசாமிபட்டியை சேர்ந்த பாலகுரு என்பவரிடம் செல்போனில் பேசியது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பாலகுருவை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர் மதுரைக்கு கண் ஆபரேஷனுக்கு செல்வதாக கூறிச்சென்று விட்டு தலைமறைவாகி விட்டார்.
தந்தை-மகள் உள்பட 8 பேர் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் வல்லம் புதூர் சேத்தி கிராம நிர்வாக அலுவலர் வள்ளி முன்பு ஆஜரான பாலகுரு சக்திவேலை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். இதனையடுத்து அவரை வல்லம் போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். போலீசாரிடம் பாலகுரு பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொலை தொடர்பாக வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுரு(48), அவரது மகன் துரைமுருகன்(19), மகள் தேவிகா(20), சத்யா(34), கதிர்வேல் (45), கூலிப்படையை சேர்ந்த கிரிவாசன்(45), சந்தோஷ்குமார்(44), கார்த்தி(35) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவின் பேரில் தேவிகாவை திருச்சி மத்திய சிறையிலும், மற்ற 7 பேரை புதுக்கோட்டை சிறையிலும் அடைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
கொலைக்கு காரணம் குறித்து பாலகுரு அறித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது பக்கத்து ஊரான திருமலைசமுத்திரம் தெற்கு தெருவில் வசிக்கும் கர்ணன் என்பவரின் மகன் சக்திவேல் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தற்காலிக போஸ்ட்மேனாக வேலை பார்த்தான். அப்போது எப்படியோ எனது மகள் தேவிகாவின் செல்போன் நம்பரை பெற்று அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளான்.
இது நாளடைவில் எனக்கு தெரிய வர நான் சக்திவேலை பற்றி விசாரித்தபோது அவனுக்கு மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது மற்றும் பல பெண்களுடன் பழக்கம் உள்ளது தெரிய வந்தது.
அதனால் சக்திவேலின் தாய்மாமாவையும் எங்கள் உறவினர் ஒருவரையும் வைத்து சக்திவேலை எங்கள் பம்பு செட்டுக்கு வரச்சொல்லி பேசி கண்டித்தேன். அப்போதும் அவன் கேட்காததால் ஒரு ஆண்டு கழித்து திருமணம் வைத்துக்கொள்வோம் என்று பஞ்சாயத்து பேசி முடித்தோம்.
படங்களை வெளியிடுவதாக மிரட்டல்
அப்போது சக்திவேல் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்தால் உங்கள் மகளுடன் நான் நெருக்கமாக இருக்கும் படங்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிடுவேன் என மிரட்டினான். அது முதல் எனக்கு அவன் மீது கோபமும், வெறுப்பும் ஏற்பட்டது.
அதன் பின்னர் ஒரு நாள் சக்திவேலை நான் எனது கொல்லைக்கு வரவழைத்து எனது மகள் படித்துக்கொண்டு இருப்பதால் ஒரு வருடம் பொறுத்துக்கொள். அதன் பிறகு திருமணம் செய்து வைக்கிறேன் என்று நான் கூறினேன்.
நான் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னை சக்திவேல் கன்னத்தில் அடித்து விட்டான். ஏற்கனவே சக்திவேல் மீது வெறுப்பில் இருந்த எனக்கு இந்த சம்பவம் அவன் மீது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. இனிமேலும் அவனை உயிரோடு விட்டு வைக்கக்கூடாது என்று நான் முடிவு செய்தேன்.
எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்
இதனையடுத்து எனது மகள் தேவிகாவிடம் சக்திவேலை பற்றிய உண்மைகளை கூறினேன். நீ அவனுடன் பேசியதையும் நெருக்கமாக இருந்ததையும் சொல்லி என்னை மிரட்டுகிறான். போட்டோவை வாட்ஸ் ஆப்பில் போட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறான். நீ அவனிடம் பழகுவதை நிறுத்திக்கொள். போனிலோ நேரிலோ பேசாதே என்று கூறினேன்.
எனது மகளும் அவனைப்பற்றி தெரிந்து கொண்டு அவனை இனிமேல் நீங்கள் எதுவேனாலும் செய்து கொள்ளுங்கள். எனக்கு இனிமேல் அவன் வேண்டாம் என்று கூறினாள்.
கூலிப்படை ஏற்பாடு
இதுகுறித்து எனது நண்பரான செங்கிப்பட்டியை சேர்ந்த சத்யாவிடம் நடந்த விவரங்களை சொல்லி சக்திவேலை ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினேன். அதற்கு சத்யா தன்னிடம் ஆட்கள் உள்ளதாக கூறி குத்தாலம் கிரிவாசன், சிவகங்கை சந்தோஷ், மதுரை கார்த்திக் ஆகியோரின் போன் நம்பரை எனக்கு கொடுத்தார்.
நான் போன் மூலம் கிரிவாசனுக்கு தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை சொன்னேன். அவர்களும் அதற்கு உடன்பட்டு ஆளை காலி செய்வதாக இருந்தால் ரூ.2 லட்சம் கேட்டார்கள். அதற்கு நான் உடன்பட்டு அவர்களை கடந்த 3-ந் தேதி வரச்சொன்னேன். அவர்களும் வந்து செங்கிப்பட்டியில் தங்கிவிட்டார்கள்.
சக்திவேலை இடம் விற்பனை தொடர்பாக பேச 6-ந் தேதி இரவு எனது பம்பு செட்டிற்கு அழைத்து சென்றேன். அங்கு வைத்து நான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முதலில் சக்திவேலின் தலையில் வெட்டினேன்.
உடலை ஆற்றில் வீசினோம்
அவன் சுதாரிப்பதற்குள் கூலிப்படையை சேர்ந்த கிரிவாசன், சந்தோஷ், கார்த்திக் 3 பேரும் என்னிடமிருந்த அரிவாளை வாங்கி சக்திவேலின் தலையில் வெட்டி கீழே சாய்த்தார்கள். உடனே எனது தோட்டத்தில் வேலை செய்யும் கதிர்வேல் மற்றும் எனது மகன் துரைமுருகன் ஆகியோர் உதவியுடன் சக்திவேலின் உடலை கூலிப்படையினர் எடுத்து வந்த காரில் ஏற்றிக்கொண்டு சென்றோம். வைரபெருமாள்பட்டி புது ஆற்றில் சக்திவேல் உடலையும் சற்று தள்ளி சக்திவேலின் இருசக்கர வாகனத்தையும், சக்திவேலின் செல்போனையும் ஆற்றில் வீசி எறிந்தோம்.
இனிமேல் எந்த தொந்தரவும் இருக்காது என்று இருந்த நிலையில் போலீசார் என்மீது சந்தேகம் அடைந்ததால் நான் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார்.