கீழ்பவானி பாசன கால்வாயில் பழுதான மதகு சீரமைப்பு
நத்தக்காடையூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாய் 2 இடங்களில் பழுதான மதகுகளை பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர்.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு ஆண்டு தோறும் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி 5 லட்சம் ஏக்கர் நிலம் நேரடியாகவும் மற்றும் உபரி நீர் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், ஓடைகள், தடுப்பணைகள், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கால்வாயில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி கீழ்பவானி பாசன பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நத்தக்காடையூர் அருகே மருதுறை ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் கிராம பகுதியில் செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் 2 இடங்களில் மதகு வழியாக நீர் கசிவு ஏற்பட்டு இருந்தது. இதை சீரமைக்க கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள்
இதனை தொடர்ந்து காங்கயம் கோட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து மதகுகளில் ஏற்பட்டு இருந்த நீர் கசிவை ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டி, கால்வாய் மேலே மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணிகள் செய்து நீர் கசிவை தடுத்து நிறுத்தினர்.