கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவில் நடு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் 14-வது தலம் ஆகும். இக்கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. அதன்படி புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டது. மேலும் பல பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் இந்த கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலையில் கடந்த 4-ந்தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் பல்வேறு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கும்பாபிஷேகம்
இன்று காலையில் மங்கள இன்னிசையுடன் 6-வது கால பூஜை நடந்தது. பின்னர் புனிதநீர் அடங்கிய கலசங்கள், ராஜகோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 10.45 மணியளவில் சிவாச்சாரியார்கள், குருக்கள் மந்திரங்கள் ஓதி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாணம், ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை விழுப்புரம் இணை ஆணையர் சிவகுமார், உதவி ஆணையர் சிவாகரன், கோவில் செயல் அலுவலர் சூரிய நாராயணன், அலுவலக பணியாளர் தனசேகர் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.