மாவட்டத்தில் ரூ.28 கோடியில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


மாவட்டத்தில் ரூ.28 கோடியில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகள் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.28 கோடியில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.28 கோடியில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழா

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திருப்புவனம் தாலுகா ஏனாதி பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி குத்துவிளக்கேற்றினார்.

விழாவில் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் வேளாண் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை முறையாக சேமித்து பயன்பெறும் வகையில் தமிழக அரசால் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நவீன சேமிப்புத் தளங்கள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நெல் கிட்டங்கிகள்

அதன் அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா ஏனாதி, காரைக்குடி தாலுகா பள்ளத்தூர், மானாமதுரை தாலுகா சிப்காட் ஆகிய பகுதிகளில் ரூ.28.03 கோடி மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தளத்துடன் மேற்கூரையுடன் கிட்டங்கிகள் கட்டப்பட்டுள்ளன. இதை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் காளையார்கோவில் தாலுகா சிலுக்கப்பட்டி, சிங்கம்புணரி தாலுகா சிறுமருதூர் போன்ற பகுதிகளில் ரூ.9 கோடி மதிப்பில் செயல்முறை கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். எனவே இந்த திட்ட பணிகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், திருப்புவனம் யூனியன் துணைத்தலைவர் மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் நீலமேகம், செல்வராணி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story