காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா
விவசாயிகள் திடீர் தர்ணா
காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஈரோட்டில் நடந்த வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சேது, செயலாளர் நல்லுசாமி உள்பட விவசாயிகள் சிலர் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது விவசாயிகள் தங்களது கைகளில் காலிங்கராயன் வாய்க்காலை பாதுகாப்பது தொடர்பான வாசங்களை எழுதியபடி பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
காலிங்கராயன் பாசனம்
வேளாண் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் காலிங்கராயன் பாசன விவசாய பிரச்சினை குறித்து பேசுவதற்கு கடந்த 6 மாதங்களாக அனுமதி கேட்டும், அனுமதி கொடுக்கப்படவில்லை.அதேபோல் நாங்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காலிங்கராயன் பாசன பகுதியில் விளை நிலங்களை தரிசு நிலம் என்று அதிகாரிகள் சான்று வழங்கி, ஒரு ஏக்கரில் 1,500 யூனிட் மண் எடுக்கப்படுகிறது. புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு அமர்ந்து கொண்டு மண்ணுக்கு பணம் வாங்குகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அப்போது பேசிய மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, "உங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக கூட்டம் நடைபெறும்போது சட்டத்திற்கு உள்பட்டுதான் செயல்பட வேண்டும். போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு இடையூறு செய்தாலோ, அரசு அதிகாரிகளை பணி செய்வதை தடுக்க முயன்றாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.