கொடைக்கானலில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர் கைது
கொடைக்கானலில் வாலிபரை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்.
கொடைக்கானல் அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). இவர் காதல் திருமணம் செய்து மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது நண்பர் அதே பகுதி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக உள்ள ராமேசுவரத்தை சேர்ந்த சத்தியநாதன் (28).
இன்று மாலை பர்ன்ஹில்ரோடு பகுதியில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சத்தியநாதன் ஓட்டினார். அப்போது திடீரென்று கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்தியநாதனை குத்தியதாக தெரிகிறது. உடனே மோட்டார் சைக்கிளை அவர் நிறுத்தினார். அவரிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கார்த்திக்ைக பிடித்தனர். படுகாயமடைந்த சத்தியநாதனை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை முயற்சி சம்பவம் பர்ன்ஹில்ரோடு பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்தது குறிப்பிடத்தக்கது.