உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு வீடு புகுந்து விவசாயிக்கு கத்தி வெட்டு பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு    வீடு புகுந்து விவசாயிக்கு கத்தி வெட்டு    பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே வீடு புகுந்து விவசாயியை தாக்கிய கும்பல், அந்த பகுதியில் பட்டக்கத்தியுடன் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சிவராஜ் (வயது 31). விவசாயி. கடந்த 30-ந்தேதி இவர் தனது முந்திரி தோப்பில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்த நாடு கிராமத்தில், வீரமணி என்பவரது இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, அவரது நண்பர்கள் சென்னையில் இருந்து வந்திருந்தனர்.

இதில், சென்னையை சேர்ந்த 2 பேர் அவர்களது பெண் தோழிகளை அழைத்துக்கொண்டு சிவராஜியின் முந்திரி தோப்புக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த, சிவராஜ் அவர்களை திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். அப்போது, அந்த இளைஞர்கள் சிவராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

வீடுபுகுந்து வெட்டினர்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் வீரமணி மற்றும் அவரது சென்னை நண்பர்கள் சிலர் ஆட்டோவில் தொப்பையன் குளம் கிராமத்திற்கு சென்றனர்.

அங்கு, சிவராஜியின் வீட்டுக்குள் புகுந்து அவரை பட்டாக்கத்தியால் தலையில் வெட்டினார்கள்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த நபர்கள் ஆட்டோவில் தப்பி சென்றனர். அப்போது செல்லும் வழியில் சாலையோரம் நடந்து வந்த களத்தூரை சேர்ந்த விக்னேஷ்(27) என்பவரையும் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

2 முதியவர்கள் மீது தாக்குதல்

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிவராஜ், விக்னேஷ் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில், வீரமணி நண்பர்களுடன் ஆட்டோவில் வரும் போது, சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பி கொண்டு பணம் கொடுக்காமல் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் தொப்பையன்குளத்தில் டாஸ்மாக் முன்பு காவலுக்கு இருந்த 2 முதியவர்களையும் அவர்கள் தாக்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உளுந்தூ்பேட்டை பகுதியில் பட்டாக் கத்தியுடன் அட்டகாசம் செய்த வீரமணி மற்றும் அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story