திருப்பூர் ரெயில் நிலையத்தில் கத்தியுடன் வாலிபர் ரகளை


திருப்பூர் ரெயில் நிலையத்தில் கத்தியுடன் வாலிபர் ரகளை
x

திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் அதிகாலையில் கத்தியுடன் புகுந்த வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் பகுதிக்கு நேற்று அதிகாலை 4.15 மணிக்கு கத்தியுடன் ஒருவர் வந்தார். திடீரென அவர் கத்தியை அங்குமிங்கும் சுழற்றியபடி பயணிகளை மிரட்டினார்.

அவ்வப்போது தனது கையையும் கீறிக்கொண்டே சத்தம் போட்டார். கலெக்டர் வர வேண்டும், எம்.எல்.ஏ. இங்கு வர வேண்டும். எனது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சத்தம் போட்டார். டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் கத்தியுடன் நின்ற வாலிபரை பார்த்ததும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நடனம் ஆடினார்

சம்பவம் பற்றி அறிந்ததும் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் கத்தியை காட்டி ரகளை செய்ததால் யாரும் அவர் அருகே செல்லவில்லை. 1 மணி நேரத்தை கடந்தும் அந்த வாலிபர் தொடர்ந்து ரகளை செய்தபடியே இருந்தார்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த வாலிபர் வலைவீசி பிடிக்க தயாரானார்கள். திருப்பூர் வடக்கு போலீசாரும் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

கத்தியை தட்டிவிட்ட போலீஸ்காரர்

அப்போது ரெயில்வே போலீஸ்காரர் கோபி என்பவர், நைசாக அந்த நபரிடம் பேச்சுக்கொடுத்தபடி இருந்தார். ஒரு கட்டத்தில் அவரது கவனத்தை திசை திருப்பி, போலீஸ்காரர் கோபி நைசாக அருகில் சென்று கையில் இருந்த கத்தியை தட்டி விட்டார்.

அந்த நேரத்தில் அங்கு சுற்றியிருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து குண்டுக்கட்டாக தூக்கினார்கள்.

மனைவியுடன் தகராறு

விசாரணையில் அவர் திருப்பூர் மேட்டுப்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு கண்ணன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் நள்ளிரவு 1 மணிக்கு போலீசார் அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த கண்ணன், வீட்டில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். அதன்பிறகே அவர் திருப்பூர் ரெயில் நிலையத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் கண்ணன் செயல்பட்டதால் அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story