இரவு நேர பணியில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்


இரவு நேர பணியில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்
x

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேர பணியில் டாக்டா்களை நியமிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி;

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேர பணியில் டாக்டா்களை நியமிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வளா்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சேரி, ஏனங்குடி, கணபதிபுரம், திருக்கண்ணபுரம், திருப்பத்தாங்குடி உள்ளிட்ட ஊா்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.முன்பு பெயரளவுக்கு நடந்து வந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது டாக்டா்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பினும் இரவு நேரத்தில் எந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது கிடையாது.

இரவு நேரங்களில் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை

குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்டவா்களும், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவா்களும் இந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு சென்றால் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை என அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு பணியில் இருக்கும் நர்சுகள் முதல் உதவி சிகிச்சை மட்டும் செய்துவிட்டு உடனடியாக நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் அனுப்பி விடுகின்றனா். இதனால் பல நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்திலும் நோயாளிகளுக்கு முழு சிகிச்சை கிடைக்கும் வகையில் இரவு நேரப்பணியில் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

24 மணி நேரமும் சிகிச்சை

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், தற்போது கிராமப் புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் அவசர காலத்தில் மருத்துவ வசதி கிடைப்பதில்லை. அதற்கு காரணம் டாக்டா்கள் இங்கு தங்குவது கிடையாது. அரசு டாக்டர்களுக்கு தங்கும் வசதியோடு வீடு கட்டி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே டாக்டர்கள் இரவு நேரம் தங்கி பணியாற்றும் நிலை ஏற்படும். எனவே 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story