மக்களின் தேவையை அறிந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மக்கள் தேவை அறிந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து தினம் தினம் சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு நகராட்சி மற்றும் மாநகராட்சி, பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைக்கு தனியாக திட்டம் போட்டு மத்திய அரசின் தேசிய திட்டத்தில் நாமும் இணைந்து செயல்படுவோம்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் விரிவடைந்த மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டம், திறந்தவெளி காலியிடம் மேம்பாடு செய்தல், ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு மையம், புதிய குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பஸ் நிலையம், எல்.இ.டி. தெருவிளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிநீர் தேவை பூர்த்தியாகும்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, '4-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தும்போது திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு தண்ணீர் தேவை பூர்த்தியாகும். நாமக்கல் மாவட்டம் சோளசிராமணி திட்டத்தின் மூலம் தடுப்பணையில் இருந்து பெரிய திட்டமாக குடிநீர் திட்டம் நம் மாவட்டத்துக்கு வருவதற்கு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் நகராட்சிகள், பல்லடம், பொங்கலூர் போன்ற பகுதிகளில் குடிநீர் வசதி தன்னிறைவு பெறும்' என்றார்.
நிகழ்ச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் ஆறு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாநகராட்சி பங்கீட்டு தொகை மற்றும் வங்கிக்கடன் தொகையாக 6 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.34 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கடனுதவிக்கான காசோலையும், மாநகராட்சி பங்கீட்டுத்தொகையாக 34 பேருக்கு தலா ரூ.35 ஆயிரத்து 900 வீதம் ரூ.12 லட்சத்து 20 ஆயிரத்து 600-க்கான காசோலையும் வழங்கப்பட்டன.
சாலையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி
உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம், வெள்ளகோவில் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சிகளை சேர்ந்த சாலையோர வியாபாரிகளுக்கு தொழில் தொடங்க வங்கிக்கடன் நிதி உதவியாக 17 பேருக்கு ரூ.24 லட்சம் மதிப்பில் நிதியுதவியை அமைச்சர்கள் வழங்கினர்.
ஆய்வுக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, மேயர் தினேஷ்குமார், சுப்பராயன் எம்.பி., சண்முகசுந்தரம் எம்.பி., செல்வராஜ் எம்.எல்.ஏ., துணை மேயர் பாலசுப்பிரமணியம், கலெக்டர் வினீத், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, கோவிந்தராஜ், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.