கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 1,500 பக்க விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா உள்பட 316 பேரிடம் நடத்திய 1,500 பக்க விசாரணை அறிக்கையை போலீசார் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந்தேதி கொள்ளை நடந்தது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு வழக்கு விசாரணை தீவிரமடைந்து உள்ளது. அதன்படி மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சாட்சிகள், வழக்கில் தொடர்புடையவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
316 பேரிடம் விசாரணை
தனிப்படை போலீசார் இதுவரை 316 பேரிடம் மறு விசாரணை நடத்தினர். குறிப்பாக சசிகலா, தனியார் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விவேக், விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கோடநாடு மேலாளர் நடராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
அறிக்கை தாக்கல்
இந்தநிலையில் நேற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார், 1,500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி முருகனிடம் தாக்கல் செய்தனர். அதில் 316 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் போது பெறப்பட்ட பதிவுகள், ஆவணங்கள் இடம்பெற்று உள்ளது.
இதேபோல் மற்றொரு நகல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை விரைவில் தொடங்குவார்கள் என்பதால், கோடநாடு வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.