கோடநாடு வழக்கு - புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை


கோடநாடு வழக்கு - புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 26 July 2023 12:15 PM IST (Updated: 26 July 2023 12:07 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.

இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆத்தூரில் இருந்து சேலம் - சென்னை புறவழிச்சாலையில் எத்தனை வேகத்தடைகள் உள்ளன என சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஆத்தூர் நகராட்சி அலுவலக உதவி செயற்பொறியாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு சந்தனகிரி பகுதியில் சாலை விபத்தில் இறந்தார். கனகராஜ் உயிரிழந்த சில மணி நேரத்தில் வேகத்தடையால் தவறி விழுந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனகராஜ் இறந்ததாக கூறப்பட்ட முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்ததா?. எதற்காக புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டது? என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Next Story