கொடியம்பாளையம் தீவு கிராமம் சுற்றுலா தலமாக மாற்றப்படும்
கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறினார்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றியகுழு துணை தலைவர் பானு சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையர் அருள்மொழி வரவேற்றார். இளநிலை உதவியாளர் சரத்குமார் அறிக்கை படித்தார். பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ஆழப்படுத்த வேண்டும்
அங்குதன் (தி.மு.க.): திருமுல்லைவாசல், தொடுவாய், நடுக்கொட்டாயமேடு ஆகிய கடலோர பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாயில் இரு கரைகள் மண்ணரிப்பினால் தூர்ந்து விட்டது. இதை ஆழப்படுத்த வேண்டும். கூழையார் கடற்கரையை சீரமைத்து மேம்படுத்த வேண்டும்.
மாலினி பூவரசன் (தி.மு.க.):- திருமுல்லைவாசல் ஊராட்சியில் பஸ் நிலையத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்.
குடிநீர்
லட்சுமிபாலமுருகன் (தி.மு.க.):- காட்டூர் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும்.
தமிழரசி (அ.தி.மு.க.):- மாதானம் ஊராட்சியில் தென்பாதி தெருவில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
சிவபாலன் (பா.ம.க.):- கோதண்டபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டருக்கு மாத சம்பளத்தை முறைப்படி வழங்க வேண்டும்.
பரக்கத் நிஷா (தி.மு.க.):- ஆணைக்காரசத்திரம் ஊராட்சி தைக்கால் கிராமத்தில் நீண்ட நாட்களாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அங்கு தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மஞ்சுளா தேவி ரமேஷ் (தி.மு.க.):- திருமுல்லைவாசல் கிராமத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்கு உப்பனாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க வேண்டும்.
சுற்றுலா தலம்
செந்தாமரைக் கண்ணன் (தி.மு.க.):- வட ரங்கம் ஊராட்சி சென்னியா நல்லூர் கிராம சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
பானு சேகர் (காங்கிரஸ்):- ஆச்சாள்புரம் -மாதானம் இடையே சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
ஒன்றிய ஆணையர்:- கொள்ளிடம் பகுதியில் குப்பைகளை அகற்ற பொதுமக்கள், வியாபாரிகளின் ஒத்துழைப்பு தேவை.
ஜெயப்பிரகாஷ் (தலைவர்):-
கொடியம்பாளையம் தீவு கிராமம் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பக்கிங்ஹாம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கபபடும். கொள்ளிடம் பகுதியில் கனரக வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படும். உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ண சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் நன்றி கூறினார்.