கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கடத்தூர்
கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனம்
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இதன் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் நெல் மற்றும் கரும்பு, வாழை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2-ம் போக பாசனத்துக்காக கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தண்ணீர் திறப்பு
அதை ஏற்று தமிழக அரசு கொடிவேரி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடந்தது.
அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து சென்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.