சொத்து பிரச்சினையில் சிறுமியை கொடுவாளால் வெட்டிய பெரியப்பா-போலீசார் விசாரணை


சொத்து பிரச்சினையில் சிறுமியை கொடுவாளால் வெட்டிய பெரியப்பா-போலீசார் விசாரணை
x

சொத்து பிரச்சினையில் சிறுமியை கொடுவாளால் வெட்டிய பெரியப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சொத்து பிரச்சினை

சேலம் சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண் (வயது 37), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ஜோதிமணி (35). இவர்களுடைய மகள் பிரகதி (14), லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறாள்.

அருணுக்கும், அவரது அண்ணன் அசோக்குக்கும் (41) இடையே குடும்ப சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஜோதிமணி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அசோக், ஜோதிமணி இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறாக முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அசோக் தான் எடுத்து வந்த கொடுவாளால் திடீரென ஜோதிமணியை வெட்ட முயன்றார். உடனே சுதாரித்து கொண்டு ஜோதிமணி விலக முயன்றார்.

சிறுமிக்கு வெட்டு

அதேேநரத்தில் தாயை காப்பாற்ற சிறுமி பிரகதி குறுக்கே வந்தார். இதனால் பிரகதியின் தலையில் கொடுவாள் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சிறுமியை குடும்பத்தினர், அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில், அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுமியின் பெரியப்பா அசோக்கை தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story