கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஒப்பந்தக்காரர்கள் போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஒப்பந்தக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வட்டார அரசு ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்க தலைவர் முப்புடாதி பவுன் மாரியப்பன் தலைமையில் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் துணைத் தலைவர் அய்யாதுரை, செயலாளர் எஸ்.கே. அமிர்த
ராஜ், பொருளாளர் சாந்தி தங்கராஜ், துணைச் செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து கொடுத்த மனுவில், கோவில்பட்டி வணிக வரித்துறை அலுவலகத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, சங்க உறுப்பினர்களின் வங்கி பண பரிவர்த்தனையை நிறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சங்க உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வட்டியுடன் திரும்ப கொடுக்கவும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் வங்கி கணக்கிற்கு விதித்த தடையை நீக்கவும், வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என்று கூறி இருந்தனர்.
இதுகுறித்து முறைப்படி நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.