சாலையோரங்களில் விற்பனைக்கு வந்துள்ள கோல மாவு


சாலையோரங்களில் விற்பனைக்கு வந்துள்ள கோல மாவு
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாதம் பிறந்ததையொட்டி சாலையோரங்களில் கோல மாவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

வீதியெங்கும் வண்ண, வண்ண கோலங்கள் மின்னுவதும், விடியற்காலையில் ஒலிக்கும் பஜனை பாடல்களும் மார்கழி மாதத்தின் தனிச்சிறப்புகளாகும். தேவர்களை வரவேற்கும் விதமாக இம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீட்டின் வாசலை சுத்தம் செய்து வண்ண கோலமிட்டு அந்த கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள். இவ்வாறு கோலம் போடுவதால் மனதில் மகிழ்ச்சி பொங்குவதோடு மகாலட்சுமியின் அருளும் பூரணமாக கிட்டும் என்பது மட்டுமின்றி கோலங்கள், தீயசக்திகளை வீட்டினுள் வருவதை தடுக்கும் என பெண்கள் நம்புகிறார்கள்.

கோல மாவு விற்பனை

இத்தகைய சிறப்புமிக்க மார்கழி மாதம் நேற்று முன்தினம் பிறந்தது. இதையொட்டி பெண்கள், தங்கள் வீட்டு வாசல் முன்பு வண்ண கோலமிட்டு அலங்கரித்து வருகின்றனர்.

இதையொட்டி விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் வீதி, வீதியாக வாகனங்களில் வண்ண கோல மாவு கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் விழுப்புரம் திரு.வி.க. வீதி, ரங்கநாதன் சாலை, கோலியனூர், வளவனூர் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே சாலையோரங்களிலும் வண்ண கோல மாவினை சாக்கு மூட்டைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். ¼ கிலோ கோல மாவு ரூ.30-க்கு விற்கப்படுகிறது. இதனை ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கிறார்கள்.


Next Story