சென்னையில் கோலாகலம்: மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


சென்னையில் கோலாகலம்: மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x

சென்னையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை,

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இல்லங்கள்தோறும் தேசியக்கொடி பறந்தது. பள்ளி, கல்லூரிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் தேசியக்கொடியை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஏற்றிவைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் தேசியக்கொடியை ஏற்றினார்.

வருமான வரி அலுவலகம்

சென்னை வருமான வரித்துறை வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில் மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். சென்னை மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி தேசியக்கொடியை ஏற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகத்தில் வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் தென் மண்டல செயல் இயக்குனர் சைலேந்திரா தேசியக்கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. பவனில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் மண்டலத்தின் முதன்மை தலைமை கமிஷனர் மண்டலிகா சீனிவாஸ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.

துறைமுகம்

சென்னை காமராஜர் துறைமுகத்தில் நடந்த விழாவில் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் தேசியக்கொடியை ஏற்றினார். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை மெட்ரோ ரெயில் நிலைய தலைமை அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் சித்திக் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

சுங்கத்துறை

சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் மண்டல தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சவுத்ரி தேசியக்கொடியை ஏற்றினார். ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் எஸ்.எல்.ஜெயின் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

கனரா வங்கி தலைமை அலுவலகத்தில் அதன் நிர்வாக இயக்குனர் பிரபாகர் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் பார்த்தபிரதீன் சென்குப்தா தேசியக்கொடியை ஏற்றினார். தேனாம்பேட்டையில் உள்ள இந்திய தணிக்கை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தெற்கு ரெயில்வே சார்பில் பெரம்பூர் ரெயில்வே அரங்கத்தில் பொது மேலாளர் பி.ஜி.மல்யா தேசியக்கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். சென்னை கோட்ட மேலாளர் கணேஷ், ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. ஈஸ்வர ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story