திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ஆவணித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஆவணித் திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தேரோட்டம்
10-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான ேதரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.
காலை 6.15 மணிக்கு விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் வலம் வந்த தேரானது காலை 6.35 மணிக்கு மீண்டும் நிலையை வந்து சேர்ந்தது.
தொடர்ந்து காலை 6.40 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேரானது காலை 7.30 மணிக்கு மீண்டும் நிலையை வந்து சேர்ந்தது. தொடர்ந்து 7.40 மணிக்கு வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டு, 8.25 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது.
திரளான பக்தர்கள்
ஆவணி திருவிழா தேரோட்டத்தில் திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி வஷீத்குமார், கோவில் அறங்காவலர்கள் கணேசன், செந்தில் முருகன், கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில்வேல் முருகன், பேஸ்கார் ரமேஷ், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், உடன்குடி நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் மால்ராஜேஷ், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தங்கேச ஆதித்தன், வரதராஜன் ஆதித்தன், பகவதி ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், ரங்கநாதன் ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், சொக்கலிங்க ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புஷ்ப சப்பரம்
திருவிழாவின் 11-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் சன்னதி தெருவில் உள்ள யாதவ மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறார்கள்.
அங்கு இரவில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி- அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கின்றது. பின்னர் வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.
மஞ்சள் நீராட்டு
நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.