திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்


திருச்செந்தூரில் கோலாகலம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

தேரோட்டம்

10-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.

காலை 6.15 மணிக்கு விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் வலம் வந்த தேரானது காலை 6.35 மணிக்கு மீண்டும் நிலையை வந்து சேர்ந்தது.

திரளான பக்தர்கள் தரிசனம்

தொடர்ந்து காலை 6.40 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேரானது காலை 7.30 மணிக்கு மீண்டும் நிலையை வந்து சேர்ந்தது. தொடர்ந்து 7.40 மணிக்கு வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டு, 8.25 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story