கொளஞ்சியப்பர் கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்


கொளஞ்சியப்பர் கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் வெளியூர் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் அரசு ஆதிதிராவிடர் நல விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி, மாணவியர் விடுதி அமைந்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் தங்கி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த விடுதிகளில் தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்து மாணவ-மாணவிகள் நேற்று கொளஞ்சியப்பர் கல்லூரி பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது மாணவர்கள் கூறுகையில், விடுதிகளுக்கு உணவு படியை உயர்த்தி வழங்காததால் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவில்லை. கல்லூரியில் இருந்து விடுதிகளுக்கு செல்ல சாலை வசதி, மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும். அனைத்து விடுதிகளிலும் காப்பாளர்கள் தங்கி பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்றனர்.

அதற்கு தாசில்தார் அந்தோணிராஜ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story