கொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து உபரிநீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
6 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
இந்த வெள்ளநீர், கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைதிட்டு, மேலவாடி, பாலூரான் படுகை உள்பட 6 கிராமங்களை சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரையோரம் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் வீடுகளை மட்டுமின்றி அங்குள்ள விளைநிலங்களையும் மூழ்கடித்து உள்ளது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
முகாம்களில் உணவு
கிராமத்தை விட்டு வெளியேறும் மக்களுக்கு கொள்ளிடம் ஆற்றங்கரை, அனுமந்தபுரம், ஆச்சாள்புரம், அளக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய் துறையினர் செய்து கொடுத்து வருகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் மருந்துகள் கால்நடை மருத்துவத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கூடுதல் படகுகள்
தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் பழையாறு கிராமத்திலிருந்து கூடுதல் பைபர் படகுகள் வரவழைக்கப்பட்டு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் மூலம் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை கீழ் காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிடம் பகுதியில் முகாமிட்டு தண்ணீர் வரத்தை கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சுனாமி குடியிருப்பு
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 6 கிராமங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக பழையாறு சுனாமி குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து வருகிறது. பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், இப்பகுதி மக்களும் தவித்து வருகின்றனர். எனவே சுனாமி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் வெள்ளம் சூழ்ந்த படுகை கிராமங்கள் மற்றும் பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சுற்றி தண்ணீர் சூழ்ந்த பகுதியையும், மக்களுக்கு உணவு சமைக்கப்படும் இடம் மற்றும் அதன் தரம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.