சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்-வேறு ஒரு பெண்ணை நியமித்து பாடம் நடத்தியதால் நடவடிக்கை
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் பள்ளிக்கு வராமல் வேறு ஒரு பெண்ணை நியமித்து பாடம் நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் ஆசிரியர்
சேலம் அருகே கொண்டப்பநாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏற்காடு தலைச்சோலையை சேர்ந்த முரளிந்திரன் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் வெளியில் சென்றுவிடுவதாகவும், அதற்கு பதில் அவர் தனக்கு தெரிந்த வேறு ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்த சொல்லி வந்ததாகவும் புகார் எழுந்தது.
இதுபற்றி அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், சம்பந்தப்பட்ட கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு வகுப்பறையில் ஆசிரியர் முரளிந்திரன் பணியில் இல்லாததும், அவருக்கு பதில் வேறு ஒரு பெண் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவர் பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பணி இடைநீக்கம்
இதையடுத்து மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்து பாடங்களை எடுக்க சொல்லியதற்காகவும், பள்ளிக்கு வந்துவிட்டு வெளியில் சென்றதாகவும் எழுந்த புகாரின்பேரில் அறிவியல் ஆசிரியர் முரளிந்திரனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.