கொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மை பணி தீவிரம்
வருகிற 7-ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரடாச்சேரி:
வருகிற 7-ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
7-ந்தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் செய்ய வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 17-ந் தேதி முதல் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணி
கொரடாச்சேரி பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் முதல் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பள்ளியை சுற்றிலும் உள்ள செடி, கொடிகளை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
மேலும் பள்ளி வளாகம் முழுவதும் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தினர். பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வகையில் பார் அமைத்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.