100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க ஏற்பாடு


100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க ஏற்பாடு
x
திருப்பூர்


திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இந்த பணியை கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு செய்தார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்களில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவுகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகளின் கையிருப்பு, டாக்டர்கள், நர்சுகள், சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை முன்கூட்டியே தயார்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இதைத்தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் வினீத், கொரோனா அவசரகால ஒத்திகையை மேற்கொண்டார். கொரோனா நோயாளிகள் வருகை அதிகரித்தால், அவர்களுக்காக பிரத்யேகமாக கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்கான ஏற்பாடுகளை கேட்டறிந்தார். ஆக்சிஜன் தேவை, மருந்து, மாத்திரைகள், படுக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.

கொரோனா சிறப்பு வார்டுக்கு நோயாளிகள் செல்வதற்காக தனி வழி, வரவேற்பு அறை, வார்டுகளில் செய்ய வேண்டிய வசதிகள், நோயாளிகள் குணமடைந்து வெளியே செல்வதற்கான வழி என அனைத்து ஏற்பாடுகளையும் ஆலோசித்தார். 100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டை உடனடியாக தயார் செய்யும் வகையில் ஏற்பாடுகளை மருத்துவத்துறையினர் செய்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.

100 படுக்கைகளுடன்சிறப்பு வார்டு

ஆய்வு குறித்து அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் கூறும்போது, 'கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. இருப்பினும் தயார் நிலையில் இருப்பதற்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். 100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்கு அனைத்தும் தயாராக உள்ளது. ஆக்சிஜன் போதிய அளவு உள்ளது. டாக்டர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மருத்துவமனை கட்டுமான பணி நடப்பதால், ஏற்கனவே அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் படுக்கைகள் அமைக்கப்பட்டு தற்போது நோயாளிகள் உள்ளனர். கொரோனா நோயாளிகளின்எண்ணிக்கை அதிகரிக்கும்போது உடனடியாக அந்த வார்டை, 100 படுக்கைகளுடன் சிறப்பு வார்டாக மாற்றும் அளவுக்கு அனைத்து ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக உள்ளோம். கொரோனா நோயாளிகள் சிறப்பு வார்டுக்கு வந்து செல்வதற்கு தனியாக வழி அமைக்கப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்' என்றார்.

ஆய்வின்போது பொது சுகாதாரத்துறை தலைமை பேராசிரியை செண்பகஸ்ரீ, கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர்உடனிருந்தனர்.


Next Story