கொரோனாவுக்கு முதியவர் பலி
வெள்ளகோவிலில் கொரோனாவுக்கு 82 வயது முதியவர் ஒருவர் பலியானார்.
இதுபற்றி கூறப்படுவதாவது:-
முககவசம் அணிவது கட்டாயம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலுக்கு கடிவாளம் போடும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைத்தெறிய பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் முககவசம் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக முககவசம் அணிவது மேலும் சில இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
முதியவர் பலி
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகர் பகுதியை சேர்ந்த 82 வயது முதியவருக்கு நேற்றுமுன்தினம் காலை காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்தது. உடனே அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ெகாண்டு சேர்த்தனர்.
அங்கு அவருடைய சளி மாதிரியை பரிசோதித்துப்பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் முதியவர் நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவருடைய உடல் கோவையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மனைவிக்கும் கொரோனா
கொரோனாவுக்கு பலியான முதியவரின் வீட்டைச் சுற்றி நகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி ெதளித்து சுகாதார பணியை வெள்ளகோவில் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவரின் மனைவியும் கொரோனா தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.