கடற்பாசி குறித்து கொரியா குழுவினர் ஆய்வு
கடற்பாசி குறித்து கொரியா குழுவினர் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முனைக்காடு பகுதியில் ஏராளமானோர் கடல்பாசி உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரியா நாட்டை சேர்ந்த இறக்குமதி நிறுவன நிர்வாகிகள் 9 பேர் அடங்கிய குழுவினர் இந்த கடல்பாசியை வாங்கி தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக கொரியா நாட்டு குழுவினர் மண்டபம் முனைக்காடு வந்தனர். இந்திய கடல்உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், மீன்வளத்துறை, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் அவர்களை வரவேற்று கடல்பாசி உற்பத்தி குறித்து விளக்கி கூறப்பட்டது. அந்த குழுவினர் முனைக்காடு பகுதியில் உற்பத்தியாகும் கடல்பாசி மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அவர்களிடம் கடல்பாசியின் தன்மை, தரம் குறித்தும் அதிகாரிகள் விளக்கி கூறினர்.
முனைக்காடு பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகமான வருவாய் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது. குழுவினர் கடல் பாசி தரத்தை ஆய்வு செய்து ஐஸ்கிரீம், அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றிற்கு உகந்ததாக உள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக அழகுசாதன பொருட்கள் அதிகம் தயாரிக்க இந்த கடல்பாசிகள் தேவை அதிகம் உள்ளதால் இங்கிருந்து வாங்கி கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கொரியா சென்று அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இதன்மூலம் முனைக்காடு பகுதியில் உற்பத்தியாகும் கடல்பாசி கொரியாவிற்கு ஏற்றுமதியாவதும், அதன்மூலம் அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், இந்திய கடல்உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய இணை இயக்குனர்கள் அசோக்குமார், சசி, மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் ரவீந்திரன், மீன்வளத்துறை துணைஇயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர்கள் சிவக்குமார், அப்துல்காதர் ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டனர்.