கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் சேர்வதற்கான தகுதிச்சுற்றில், கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் சேர்வதற்கான தகுதிச்சுற்றில், கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
அரையிறுதி போட்டி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் என 3 டிவிஷனாக பிரிக்கப்பட்டு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு டிவிஷனிலும் தலா 10 அணிகள் பதிவு செய்து, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆண்டுதோறும் சி டிவிஷன் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் பி டிவிஷனுக்கும், பி டிவிஷனில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் ஏ டிவிஷனுக்கும் தகுதி உயர்த்தப்படும்.
இந்தநிலையில் கிரிக்கெட் சங்கத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்து விளையாட விருப்பம் தெரிவித்து மொத்தம் 15 அணிகள் விண்ணப்பித்து இருந்தன. இந்த அணிகளில் 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வந்தது. நேற்று முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் அணியும், குன்னூர் புளூ வேனோம் அணியும் மோதியது.
அபார வெற்றி
தலா 35 ஓவர்கள் கொண்ட அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் அணி 35 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ரன்களை குவித்தது. இந்த அணி வீரர்கள் விக்னேஷ் 81 ரன்கள், சிவ பாரத் 63 ரன்கள், சதாம் உசேன் 36 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய கோத்தகிரி புளூ வேனோம் அணி 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பிக் மாஸ்டர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் உமர் முக்தார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரையிறுதியில் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் சி சிவிஷனில் இணைந்து விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.