திறந்தவெளி பாராக மாறிய கோத்தகிரி உழவர் சந்தை
கோத்தகிரி கடைவீதியில் உள்ள செயல்படாத உழவர் சந்தையை மதுப்பிரியர்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் உள்ள செயல்படாத உழவர் சந்தையை மதுப்பிரியர்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
உழவர் சந்தை
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் கோத்தகிரி கடைவீதி பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு அலுவலகம், கடைகள், கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்துமிடம், பாதுகாப்பு சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தாலும், அந்த வழியாக மினி பஸ்கள் இயக்கபடாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கபட்டதாலும் உழவர் சந்தை சில மாதங்களில் செயலிழந்தது. பின்னர் பல முறை வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் உழவர் சந்தையை திறக்க முயற்சி மேற்கொண்டும், விவசாயிகள் உழவர் சந்தையில் கடைகளை அமைக்க போதிய ஆர்வம் காண்பிக்காததால் உழவர் சந்தை மூடப்பட்டது.
மேலும் இந்த உழவர் சந்தையை ஒட்டி அரசின் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளதால், டாஸ்மாக் மதுக்கடைக்கு வரும் மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு செயல்படாத உழவர் சந்தை வளாகத்திற்குள் மதுபாட்டில்களை உடைத்து போட்டு விட்டு, பிளாஸ்டிக் டம்ளர்களையும் போட்டு விட்டு செல்கின்றனர்.
பராமரிக்க வேண்டும்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உழவர் சந்தையில் நுழைவு வாயில் பூட்டி வைக்கப்படாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி, டாஸ்மாக் மதுக்கடைக்கு வரும் மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி உழவர் சந்தை வளாகத்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்து மது அருந்தி விட்டு கண்ணாடி பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் உடைந்த கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் மதுப் பிரியர்கள் சிலர் போதை தலைக்கேறி உழவர் சந்தை வளாகத்திற்குள் படுத்து உறங்கி வருகின்றனர். எனவே உழவர் சந்தை வளாகத்தில் உள்ள மக்காத கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, நுழைவு வாயிலைப் பூட்டி வைக்கவும், பராமரிப்புப் பணிகள் செய்து, வர்ணம் பூசி மீண்டும் உழவர் சந்தையைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.