கோத்தகிரி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் விரைவில் திறப்பு


கோத்தகிரி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் விரைவில் திறப்பு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோத்தகிரி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோத்தகிரி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒன்றிய அலுவலகம்

கோத்தகிரி காந்தி மைதானத்திற்கு அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்டு 11 கிராம ஊராட்சிகள் உள்ளன. தற்போது உள்ள அலுவலகம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. தொடர்ந்து உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்த காரணத்தால் கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து, மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி வந்தது. இதனால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். மேலும் முக்கியமான ஆவணங்களை பாதுகாத்து வைப்பதற்கும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து ஒருங்கிணைந்த ஒப்படைப்பு வருவாய் நிதி திட்டத்தின் கீழ் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி, அனைத்து வசதிகளுடன் 2 தளத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதிய கட்டிடம்

அதன்பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, முன்புறம் தரைத்தளத்தில் இன்டர் லாக் கற்கள் பதிக்கும் பணி மற்றும் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. மேலும் தடுப்புகள் அமைத்து அறகைளை பிரிக்கும் பணி, அலமாரிகள், நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்களை வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துவிட்டது. இதனால் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் புதிய கட்டிடம் உள்ளது.

விரைவில் அறிவிப்பு

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக ஊராட்சி மன்ற பொதுக்கூட்ட அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு திறப்பு விழா தேதியை விரைவில் அறிவிக்கும். அதன்பிறகு புதிய கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story