கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா மறுபூஜையுடன் நிறைவு
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா மறுபூஜையுடன் நிறைவு
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் பல்வேறு சமுதாய மக்களின் உபயத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பல்வேறு வாகனங்களில் வீற்றிருந்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழாவின் 21 -வது நாளான நேற்று காலை 10 மணிக்கு பல புண்ணிய ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக் குடங்கள் ஊர்வலம் கடைவீதி சித்தி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, ரோஸ் காட்டேஜ், காம்பாய் கடை, பஸ்நிலையம், கடைவீதி வழியாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தது. பகல் 12 மணிக்கு தீர்த்தாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து, மறு பூஜையும் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து 21 நாட்கள் நடைபெற்ற திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது.