கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை
நாகர்கோவிலில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொத்தனார்
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகர் ஜோதி தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது47). இவரது மனைவி ஜெஸ்சிகலா (37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜார்ஜ் வெளிநாட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். ஜெஸ்சிகலா நாகர்கோவிலில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஜார்ஜ் கடந்த 2-10-2015 அன்று வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் மனைவியிடம் அழகு நிலையத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினார். மேலும் மனைவியின் நடத்தை மீது ஜார்ஜ் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கத்தியால் குத்திக்கொலை
இந்த நிலையில் 21-10-2015 அன்று இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறையில் ஜெஸ்சிகலாவும், 2 குழந்தைகளும் தூங்க சென்றனர். அவர்கள் தூங்கிய பின்பு ஜார்ஜ் அறைக்குள் நுழைந்து மனைவி ஜெஸ்சிகலாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரது சத்தம் கேட்டு குழந்தைகள் 2 பேரும் கண்விழித்தனர்.
குழந்தைகளின் கண் முன்பு ஜெஸ்சிகலா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 28 சாட்சியங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆயுள் தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் ஜார்ஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.