ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

சர்வ அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

சர்வ அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.

அமாவாசை

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்தநிலையில் வைகாசி மாத சர்வ அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடலில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திதி தர்ப்பணம், சங்கல்ப பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

இவ்வாறு புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராட வடக்கு வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரதவீதி வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தீர்த்தமாடி சென்றனர்.

பக்தர்கள் கூட்டம்

தொடர்ந்து கோவிலில் உள்ள சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்ய பக்தர்கள் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் நின்று ஒன்றன்பின்ஒன்றாக தரிசனம் செய்து சென்றனர். தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால் சர்வ அமாவாசையான நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சர்வ அமாவாசையை முன்னிட்டு திருப் புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்யவும், தேவிபட்டினம் கடலில் உள்ள நவகிரகங்களில் புனித நீராடி தர்ப்பணம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


Next Story