கோவில்களில் தனி நபர்களுக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது


கோவில்களில் தனி நபர்களுக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது
x
தினத்தந்தி 16 Jun 2022 1:17 AM IST (Updated: 16 Jun 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தனி நபர்களுக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டியை சேர்ந்த சேதுபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வடவன்பட்டி பகுதியில் உள்ள சண்டிவீரன் கோவில் திருவிழா மற்றும் எருதுகட்டு நிகழ்ச்சி வருகிற வெள்ளிக்கிழமை (நாளை) முதல் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பார்கள்.

ஆனால் கோவில் திருவிழா மற்றும் எருதுவிடும் நிகழ்ச்சி நடக்கும் போது, வடவன்பட்டி கிராமத்தை சேர்ந்த தனி நபருக்கு சாதியை அடிப்படையாக கொண்டு முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், யாருக்கும் முதல் மரியாதை செலுத்த வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அமைதி பேச்சுவார்த்தை முடிவுக்கு மாறாக யாரும் செயல்படாத வகையில், கோவில் விழாவில் தனிநபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், கோவில் திருவிழாக்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என உறுதி அளித்தார்.

விசாரணை முடிவில், "கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். மனிதர்களுக்கு இல்லை. எனவே, கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது" என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.


Next Story