கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆனிதிருமஞ்சன விழாவையொட்டி ராமேசுவரம், திருஉத்தர கோசமங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ராமேசுவரம்,
ஆனிதிருமஞ்சன விழாவையொட்டி ராமேசுவரம், திருஉத்திரகோசமங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஆனி திருமஞ்சனம்
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள உலக அளவில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தில் ஒரு லட்சம் ருத்ராட்சை களால் ஆன மண்டபத்தில் நடராஜர்-சிவகாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு திருவாதிரை ஆருத்ரா விழா அன்றும் மற்றும் ஆனி திருமஞ்சன திருவிழா அன்றும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி கோவிலின் 3-ம் பிரகாரத்தில் ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு நேற்று பால், பன்னீர், திரவியம், தேன் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை பூஜை நடைபெற்றது.
சிறப்பு பூஜை
ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் உள்ள நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கும் நேற்று பால், பன்னீர், திரவியம், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.
திருஉத்திரகோசமங்கை கோவிலில் உள்ள உற்சவ நடராஜருக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.