ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஈரோடு

ஈரோடு

ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பண்ணாரி அம்மன் கோவில்

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மிகவும் உகந்ததாகும். அதன்படி நேற்று ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருந்தது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் குண்டத்தில் இருந்த சாம்பலை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டும், குண்டம் அருகில் பெண்கள் தீபம் ஏற்றியும், உப்பையும், மிளகையும் குண்டத்தில் தூவியும் அம்மனை வணங்கினார்கள். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அரசூர்

இதேபோல் சத்தியமங்கலம் அருகே அரசூரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் 150 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்தார்கள். பின்னர் அம்மனை வாழ்த்தி பாடல் பாடினார்கள். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அந்தியூர்

இதேபோல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்து பெற்றதும் புகழ் பெற்றதுமான அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சந்தன காப்பு மற்றும் மலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோபி

கோபி டவுன் வடக்கு வீதியில் பெரம்பலூர் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று அம்மனுக்கு 100 ரூபாய் நோட்டுகளால் 10 ஆயிரம் ரூபாய் மாலையாக அணிவிக்கப்பட்டது. ரூபாய் நோட்டுக்களால் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பவானிசாகர்

பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 10 ஆயிரம் வெற்றிலைகளை பயன்படுத்தி வெற்றிலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.


Next Story