ஆடி கடைசி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
ஈரோடு
ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
ஆடி கடைசி வெள்ளி
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்தது என்பதால் அன்றைய நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சில கோவில்களில் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை அனைத்து கோவில்களிலும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பண்ணாரி
புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தார்கள். அனைவரும் வரிசையில் நின்று சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை தரிசனம் செய்தார்கள். முன்னதாக அனைவரும் குண்டம் அமைக்கப்படும் இடத்தில் குடும்ப கஷ்டம் குறையவேண்டும் என்று உப்பு-மிளகு தூவி விளக்கேற்றி வழிபட்டார்கள்.
பவானி
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை சங்கமேஸ்வரர் கோவிலில் ஈரோடு ஆதீனம் பாலாஜி குருக்கள் தலைமையில் 108 சகஸ்ரநாமம் மற்றும் 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பவானி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
அந்தியூர்
பிரசித்திபெற்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தார்கள்.
இதேபோல் அந்தியூர் செல்லீஸ்வரர், ஆஞ்சநேயர், பெருமாள் கோவில், புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலிலும் ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சிவகிரி
சிவகிரி அருகே வேட்டுவ பாளையம் புத்தூர் அம்மன் கோவிலில் நேற்று முன் தினம் பவுர்ணமியை ஒட்டியும், நேற்று ஆடி வெள்ளியையொட்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள பொன் காளியம்மன் மற்றும் எல்லை மாகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
கோபி
கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில்
ஆடிவெள்ளியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது.
பக்தர்கள் குண்டம் அமைக்கப்படும் இடத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.
கோபி அருகே உள்ள அழுக்குளி செல்லாண்டியம்மன், கொளப்பலூர் பச்சைநாயகி, மொடச்சூர் பால மாரியம்மன், சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன், புதுப்பாளையம் மகா மாரியம்மன், கோபி சாரதா மாரியம்மன், கோபி இடுக்கன் குடி மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோபி பெரம்பலூர் முத்து மாரியம்மனுக்கு 500 ரூபாய் நோட்டுகளாலும், தாழம்பூவாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.