ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா; திரளான பக்தர்கள் தரிசனம்

ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா; திரளான பக்தர்கள் தரிசனம்
ஈரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேகம்
தமிழ் மாதத்தில் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி நேற்று சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, சிவனுக்கு அன்னம் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஈரோடு கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சுமார் 100 கிலோ அரிசியில் தயாரான அன்னம் மூலமாக மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்ன அலங்காரத்தில் ஈஸ்வரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வரிசையாக செல்வதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாதேஸ்வரன் கோவில்
இதேபோல் ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த சிவனை தரிசனம் செய்தனர்.
கருங்கல்பாளையம் கமலா நகரில் உள்ள மாதேஸ்வரி உடனமர் மாதேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி 200 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதம் ஈஸ்வரனுக்கு சாற்றப்பட்டது. தொடர்ந்து சுமார் 100 கிலோ காய்கறிகள், பழங்கள் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.






