சென்னிமலை அருகே மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சென்னிமலை அருகே மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

சென்னிமலை அருகே மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

பூச்சாட்டுதல்

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் 2-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் காலையில் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வந்தனர்.

மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. 8-ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

தேரோட்டம்

மேலும் அன்று இரவு காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஆகிய ஊர்களை சேர்ந்த பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினார்கள். முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று காலை 7.20 மணி அளவில் உற்சவ அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன்பின்னர் காலை 8.10 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

திருவீதி உலா

மாலையில் குழந்தைகள் சேற்று வேடமிட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தினார்கள். மாலை 5.30 மணி அளவில் தேர் நிலை சேர்ந்தது. இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா வந்து காட்சி அளித்தார்.

பொங்கல் விழாவில் தலவுமலை, வடுகபாளையம், அம்மன்கோவில்புதூர், வாய்க்கால்மேடு, கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.


Next Story