மூலவர் சன்னதி திருநிலைக்கு ரூ.2 கோடியில் வெள்ளி கதவுகள்
ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் மூலவர் சன்னதி திருநிலைக்கு ரூ.2 கோடியில் வெள்ளி கதவுகள் அமைக்கப்பட உள்ளது.
அழகர்கோவில்,
ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் மூலவர் சன்னதி திருநிலைக்கு ரூ.2 கோடியில் வெள்ளி கதவுகள் அமைக்கப்பட உள்ளது.
அழகர்மலை
முருகப் பெருமானின் ஆறாவது படை வீடாக அழகர்மலை உச்சியில் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏற்கனவே முன்மண்டபம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட பல்ேவறு கட்டுமான பணிகள் நடந்து முடிந்து உள்ளது.
இந்தநிலையில் தங்கக் கொடிமரம் அமைத்தல், மூலவர் சன்னதியில் சாமிக்கு தங்கஆபரணங்கள் அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திருப்பணிகள் நடந்து முடிந்தது. இந்தநிலையில் நேற்று கோவிலில் மூலவர் சன்னதியாக உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதிகளில் உள்ள பழமையான 3 நிலை கதவுகளையும் சீரமைக்கும் பணிகள் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தொடங்கியது.
பூர்வாங்கப் பணியில் காரைக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த தொழிலாளர்கள் பழைய கதவுகளில் இருக்கும் வெள்ளி தகடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 3 அடி அகலம், 6¼ அடி உயரத்தில் இந்த வெள்ளி கதவுகள், ஆகம விதிப்படி அமைக்கப்பட உள்ளது. உபயதாரர்களால் வரப்பெற்ற சுமார் 250 கிலோ வெள்ளியில் ரூ. 2 கோடி மதிப்பிற்குமேல் 3 மூலவர் சன்னதி கதவுகள் அமைக்கப்படுகிறது.
ஏற்பாடு
இந்த பணிகள் 2 மாதத்திற்குள் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, நகை சரி பார்க்கும் அலுவலர் சுவாமிநாதன் மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.