சிதிலமடைந்த குறிஞ்சேரி அம்மன் கோவில்


சிதிலமடைந்த குறிஞ்சேரி அம்மன் கோவில்
x
திருப்பூர்


குடிமங்கலம் அருகே உள்ள குறிஞ்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த குறிஞ்சேரி அம்மன் கோவிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குறிஞ்சேரி அம்மன்

குடிமங்கலம் அருகே உள்ள குறிஞ்சேரியில் ஏழுகுள பாசன குளங்களின் உபரி நீர் வெளியேறும் ராஜவாய்க்கால் கரையில் குறிஞ்சேரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கிராமமே அம்மன் பெயரில் உருவாக்கப்பட்டு பெருமையும், பழமையும் வாய்ந்ததாக குறிஞ்சேரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல நூற்றாண்டுகளைக் கடந்த கோட்டமங்கலம் வல்லகொண்டஅம்மன் கோவில், சோமவாரப்பட்டி மூவர்கண்டியம்மன் கோவில், குறிஞ்சேரி அம்மன் கோவில்கள் சிதிலமடைந்து வருகிறது. குறிஞ்சேரி அம்மன்கோவிலின் முன்பகுதியில், நந்திக்கு, அழகிய சிறிய கோபுரத்துடன் நுழைவாயில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் முன் அழகிய வளைவுகளுடன் கூடிய மண்டபம் உள்ளது.சுண்ணாம்பு காரை கொண்டு பல நுாற்றாண்டுகளுக்கு முன் கோவிலில் மேற்கூரையை கட்டியுள்ளனர். கோவில்வளாகத்தில், கிணறு, ராஜவாய்க்கால் பள்ளத்துக்கு செல்வதற்கான தனி நுழைவாயில் என கலைநயத்துடன் கூடிய கட்டமைப்புகள் ஏராளமாய் உள்ளது.பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல், கோவில், சிதிலமடைந்து வருகிறது.

சீரமைக்க கோரிக்கை

குறிஞ்சேரி அம்மன்கோவிலின் முன்மண்டபத்திலுள்ள, விநாயகர் சன்னிதி சுவரில் விரிசல் விழுந்து இடிந்து உள்ளது. இதேபோல் மேற்கூறையிலும் விரிசல் விழுந்து உள்ளது. கோவிலின் மேற்கூரை வழியாகமழை நீர் உள்ளே செல்லாமல் இருக்க தற்காலிகமாக தார்பாய் வைத்து மூடியுள்ளனர். அமுது மண்டப கட்டடமும், சுற்றுச்சுவரும், முற்றிலுமாக இடிந்து கற்குவியலாக காணப்படுகிறது.

கிராமத்தின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும், கோவிலை புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொன்மையான இக்கோவிலை சீரமைக்க தொல்லியல் துறை வழிகாட்டுதல் பெற்று, இந்துஅறநிலையத்துறையினர் பணிகளை துவக்க வேண்டும் என்பதே குறிஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதி கிராம பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story