ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வலம்புரி விநாயகர்

ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் பிரசித்தி பெற்ற வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது.

அன்று மாலை 5.30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகாவ்யம், வாஸ்து சாந்தி, முளைப்பாலிகை பூஜை, கும்ப அலங்காரம் பாலாலயத்தில் இருக்கும் தெய்வங்களை கும்பத்தில் எழுந்தருளச்செய்தல் மற்றும் முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.45 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, பிரம்ப சுத்தி, விஷேசசந்தி, கோபுரகலசம் வைத்தல், மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, வேத பாராயணம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், உபசார வழிபாடு நடந்தது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை 6 மணிக்கு 4-ம் கால பூஜை, மண்டல பூஜை, அக்னிகார்யம், நாடிசந்தானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வலம்புரி விநாயகர் கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், கோபூஜை, தசதானம், தசதரிசனம், மகா தீபாராதனை நடந்தது. இதையொட்டி வலம்புரி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கும்பாபிஷேக விழாவில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

அய்யப்பன் கோவில்

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஈதூகா வீதியில் தர்மசாஸ்தா அய்யப்பன் மற்றும் விநாயகர், முருகன், கருப்பண்ணசாமி, மஞ்சமாதா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்து பூஜை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

நேற்று காலை 8.15 மணிக்கு தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பனை தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் மண்டல பூஜை தொடங்குகிறது.


Next Story